கஞ்சா விற்பனை வழக்கில் போடி நகர தி.மு.க. செயலாளர் கைது

கஞ்சா விற்ற வழக்கில், கடந்த 24 ஆண்டுகளாக வேறு பெயரில் வலம் வந்த போடி நகர தி.மு.க. செயலாளர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2017-02-21 22:15 GMT
கஞ்சா வழக்கு

தேனி மாவட்டம் போடியில் கடந்த 1993-ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முகமது இக்பால் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கொட்டக்குடி ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்பனை செய்ததாக கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்த பாண்டி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.19 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதையொட்டி பாண்டி மீது போடி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணையின் போது ஆஜராகாமல் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையொட்டி அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

நகர தி.மு.க. செயலாளர்

இந்த நிலையில் கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் சிங் என்ற செல்லப்பாண்டி என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் தான் பாண்டி என்பதும், தனது பெயரை சிங் என்ற செல்லப்பாண்டி என்று மாற்றி வலம் வந்ததும் தெரிய வந்தது.

இதையொட்டி அவரை போடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தார். கைது செய்யப்பட்ட பாண்டி தற்போது போடி நகர தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் கடந்த 1996, 2001 மற்றும் 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் கம்பம் நகராட்சி 3-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்