ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-02-21 22:30 GMT
இலவச வீட்டுமனை பட்டா

இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் சிலர் ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்றனர். அப்போது அதிகாரிகள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வழங்கப்படும் என்றும் கூறினார்கள். இதை ஏற்க மறுத்த மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா வழங்கும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

உள்ளிருப்பு போராட்டம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க தலைவர் துரைராஜ் கூறியதாவது:-

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சென்னிமலை அருகே புத்தூர்புதுப்பாளையம் பகுதியில் வீட்டுமனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை பட்டா எதுவும் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் 28-ந் தேதி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.

அப்போது எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் வன்னியசெல்வம், பிப்ரவரி மாதம் 10-ந் தேதிக்குள் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை பட்டா வழங்காததால் நாங்கள் தாசில்தாரிடம் கேட்டோம். அவர் முறையான விளக்கம் அளிக்கவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்வரை நாங்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

15 நாட்கள்

இதுகுறித்து ஈரோடு தாசில்தார் வன்னியசெல்வத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கையையும் விரைந்து எடுத்து வருகிறோம். புத்தூர்புதுப்பாளையத்தில் ஏற்கனவே 220 ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதில் 149 பேர் அந்த இடத்தை பயன்படுத்தாமல் உள்ளனர்.

எனவே அந்த நிலத்தை தகுதி உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே நிலத்தை கொடுத்தவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. அவர்களிடம் முறையான விளக்கம் பெற்ற பிறகு 15 நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கப்படும்.

இவ்வாறு தாசில்தார் வன்னியசெல்வம் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளின் உள்ளிருப்பு போராட்டம் நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்து நடைபெற்றது. 

மேலும் செய்திகள்