ராமேசுவரம் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்த ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் ‘பாதத்தை பன்னீரால் கழுவி தொட்டு வணங்கி முத்தமிட்டனர்’

ராமேசுவரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர்.

Update: 2017-02-21 23:00 GMT

ராமேசுவரம்,

பாத பூஜை

ராமேசுவரத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த பூஜையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகள் 350–க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். இந்த பூஜையை ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சத்யானந்தா தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பெற்றோர் தான் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தெய்வம். பிள்ளைகளுக்காக பல்வேறு கஷ்டங்களை சந்திப்பது உள்ளிட்ட தியாகங்களை செய்து வரும் பெற்றோரை மாணவர்கள் ஒவ்வொருவரும் கடவுளாக மதித்து நடக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

பெற்றோரின் பாதத்தை தொட்டு வணங்கும் போது கடவுளை அடையும் எண்ணம் ஏற்படும். பெற்றோரின் அறிவுரையை கேட்டு நடப்பதோடு அவர்களை வாழ்க்கையின் கடைசி வரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். இதை விட பெரிய புண்ணியம் எதுவும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதத்தை முத்தமிட்டனர்

இந்த பூஜையில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகளின் பெற்றோர் நாற்காலியில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். மாணவ–மாணவிகள் தரையில் அமர்ந்து தங்களது பெற்றோரின் காலை பன்னீரால் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர், சந்தனம், குங்குமம் வைத்து பூஜைகள் செய்தனர். இதன்பின்பு அவர்கள் பெற்றோரின் பாதத்தை தொட்டு வணங்கி முத்தமிட்டனர்.

இதேபோன்று பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் அபேதானந்தா, பரானந்தர், கங்காதர்னதர், ராதாசாமி, சாரதானந்தா, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாத பூஜைகளுக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா பள்ளி தாளாளர் சாதரனந்தா தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்