மும்பை, தானே, புனே உள்பட 10 மாநகராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு

மராட்டியத்தில் மும்பை, தானே உள்பட 10 மாநகராட்சிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

Update: 2017-02-20 21:29 GMT
மும்பை,

மராட்டியத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.

தேர்தல் ஏற்பாடுகள்


இந்த தேர்தல் களத்தில் 10 மாநகராட்சிகளிலும் உள்ள 1,268 வார்டுகளில் மொத்தம் 9,199 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். குறிப்பாக மும்பை மாநகராட்சியில் மட்டும் 2 ஆயிரத்து 271 பேர் களத்தில் இருக்கிறார்கள். மாநகராட்சி தேர்தல்களுக்கான பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

இதைத் தொடர்ந்து 10 மாநகராட்சிகளிலும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து உள்ளது.

மும்பை மாநகராட்சி

குறிப்பாக 227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சியில் வாக்களிப்பதற்கு வசதியாக 1,582 இடங்களில் 7 ஆயிரத்து 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 630 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். தேர்தல் பணியில் 42 ஆயிரத்து 797 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மை உள்ளிட்ட பொருட்களும் நேற்று அந்தந்த வாக்குச்சாவடி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பெஸ்ட் பஸ்களில் ஊழியர்கள் எடுத்து சென்றனர்.

நேற்று மாலையிலேயே வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

காலை 7.30 மணிக்கு...

இன்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5.30 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5.30 மணிக்குள் வாக்குசாவடிக்கு வரும் அனைவரும் ஓட்டுப்போடலாம்.

மும்பை மாநகராட்சியில் 91 லட்சத்து 80 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தடவை (2012) தேர்தலின் போது 42 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த தடவை வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டன. இதனால் அதிக வாக்குகள் பதிவாகும் என்று நம்பப்படுகிறது.

வாக்குச்சாவடிகளில் எந்தவித சிரமும் இல்லாமல் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மும்பையில் தற்போது கோடை காலம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. எனவே வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்கு தேவையான பந்தல்கள், தேவையான அளவுக்கு தண்ணீர், உடல் ஊனமுற்றோர் எளிதாக ஓட்டுபோட சாய்வு பாதை போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

35 ஆயிரம் போலீசார்

மும்பையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நகர் முழுவதும் 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அந்த தூரத்திற்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மும்பையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 98 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக 103 கோடியே 48 லட்சம் செலவு செய்யப்படுகிறது. வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

மராட்டியத்தில் இன்று தேர்தல் நடைபெறும் 10 மாநகராட்சிகளோடு சேர்த்து இரண்டாம் கட்டமாக 10 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 118 பஞ்சாயத்து சமிதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.

மேலும் செய்திகள்