பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து கேரளா செல்லும் சாலையில் மறியல் போராட்டம்

பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து, கேரளா செல்லும் சாலையில் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந்தேதி மறியல் போராட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-02-19 23:00 GMT
அனைத்து கட்சி கூட்டம்

பவானி ஆற்றில், கேரள மாநிலம் தேக்குவட்டை உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகள் கட்ட அந்த மாநில அரசு பணிகளை தொடங்கி செய்து வருகிறது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட் டங்களில் பாசன பகுதிகள் பாதிக்கப்படும். குடிநீர் பிரச்சினையும் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

இந்தநிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி, கீழ்பவானி முறை நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த கி.வடிவேல், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் துளசிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

12-ந்தேதி மறியல் போராட்டம்

கேரள அரசு பவானி ஆற்றில் தேக்குவட்டை என்ற இடத்தில் ஒரு தடுப்பணையை கட்டி முடித்து உள்ளது. இதனால் பவானி ஆற்று நீர் தடுக்கப்பட்டு 1½ கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது. 2-வது தடுப்பணைக்காக மஞ்சகண்டியில் வேலை தொடங்கப்பட்டு உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை பெற வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்து தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க கோவையில் அடுத்த மாதம்(மார்ச்) 12-ந் தேதி கேரளா செல்லும் பாலக்காடு சாலையில் கந்தேகவுண்டன்சாவடியில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது. அதன் மூலம் மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேரை கலந்துகொள்ள செய்வது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பவானி ஆற்று தடுப்பணைக்குழு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப் படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முத்துசாமி, நாச்சிமுத்து (தி.மு.க. மாவட்ட செயலாளர்கள்), சுசிகலையரசன், இலக்கியன்(விடுதலை சிறுத்தைகள்), ஜி.கே.நாகராஜ் (கொங்குநாடு ஜனநாயக கட்சி), மதுசூதனன் (காங்கிரஸ்), ரவூப், சிவக்குமார், அன்சர் செரீப் (எஸ்.டி.பி.ஐ.), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), இளவேனில் (தமிழ்ப்புலிகள் கட்சி), பொன்.ஆனந்தகுமார், ராஜ்குமார் (த.மா.கா.), எம்.தங்கவேல் (கொ.மு.க), தேவராஜன் (காந்திய மக்கள் இயக்கம்) உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்