தொப்பூரில் வெவ்வேறு இடங்களில் லாரி உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை போலீசார் விசாரணை

தொப்பூரில் வெவ்வேறு இடங்களில் லாரி உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2017-02-17 22:15 GMT
லாரி உரிமையாளர்

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 37). லாரி உரிமையாளர். இவர் டிரைவராகவும் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். லாரி தொழிலுக்கு பலரிடம் சீனிவாசன் பணம் கடன் வழங்கி செலவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடன் பிரச்சினையால் பாதிக் கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வீட்டில் உள்ள அறையில் சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் தற்கொலை

தொப்பூரை சேர்ந்தவர் நாகேஷ், லாரி டிரைவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (32). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். நாகேஷ் தனது வருமானத்தில் ஒரு பகுதியை மனைவியின் வங்கி கணக்கில் சேமித்து வந்தார். அந்த வங்கி கணக்கில் இருந்த கணிசமான தொகையை ராஜேஸ்வரி எடுத்ததாகவும், இதுதொடர்பாக நாகேஷ் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொழிலாளி

இதேபோல் தொப்பூரை சேர்ந்தவர் ரெங்கநாதன் ( 60). தொழிலாளி. இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் விரைந்து சென்று ரெங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த 3 சம்பவங்கள் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொப்பூரில் வெவ்வேறு இடங்களில் லாரி உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்