மும்பை மாநகராட்சி தேர்தலில் நவநிர்மாண் சேனா சார்பில் மராட்டியர் அல்லாதோர் 11 பேருக்கு வாய்ப்பு
மும்பை மாநகராட்சி தேர்தலில் மராட்டிய நவநிர்மாண் சேனா சார்பில் மராட்டியர் அல்லாதோர் 11 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
மும்பை,
மும்பை மாநகராட்சி தேர்தலில் மராட்டிய நவநிர்மாண் சேனா சார்பில் மராட்டியர் அல்லாதோர் 11 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி தேர்தல்மும்பை மாநகராட்சி தேர்தல் 21–ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. எப்போதும் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி, இந்த தேர்தலில் மராட்டியத்தை சாராத 11 பேருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வகீஸ் சரஸ்வத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
வாய்ப்பு அளிக்கப்பட்ட 11 வேட்பாளர்களும் கட்சியின் தீவிர உறுப்பினர்கள். அவர்கள் மராத்தி பேசாதவர்களாக இருக்கலாம். ஆனால், தேர்தலில் போட்டியிட தகுதிபடைத்தவர்கள். அவர்கள் தங்களை மராட்டியம் மற்றும் மும்பையின் ஒரு அங்கமாக கருதுகின்றனர்.
ரஜினிகாந்த்எங்கள் கட்சி இடம்பெயர்பவர்களுக்கு எதிரானது அல்ல. இடம்பெயர்பவர்களுக்கும் எதிராகவும், இந்தி பேசுபவர்களுக்கு எதிராகவும் நாங்கள் ஒருபோதும் போராட்டம் நடத்தியது கிடையாது. மாறாக, மராத்தியையும், மராத்தி பேசுபவர்களையும் வலுப்படுத்தி, மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
தங்களை இடம்பெயர்ந்தவர்களாக கருதுபவர்கள் மராட்டியத்தில் தங்க உரிமையற்றவர்கள். நாங்கள் எப்போதும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை உதாரணமாக கூறுவோம். அவர் மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் வாழ்ந்து அதற்காக உழைக்கிறார். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு வகீஸ் சரஸ்வத் தெரிவித்தார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் குஜராத், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், வட மற்றும் தென் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு நவநிர்மாண் சேனா வாய்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.