சென்னை திருமங்கலத்தில் சொகுசு கார் திருடியவர் கைது

சென்னை திருமங்கலத்தில் பழைய கார்களை விற்கும் நிறுவனத்தில் கார் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் சொகுசு கார் திருடிய வாலிபரை போலீசார் கைது.

Update: 2017-02-17 20:10 GMT
கோயம்பேடு,

சென்னை திருமங்கலத்தில் பழைய கார்களை விற்கும் நிறுவனத்தில் கார் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் சொகுசு கார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வசதியாக வாழ ஆசைப்பட்டு கார் திருட்டில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

நூதன முறையில் கார் திருட்டு

சென்னை அண்ணா நகர், திருமங்கலம், அமைந்தகரை, பாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனங்களில் கார் வாங்குவது போல் நடித்து நூதன முறையில் கார்களை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை திருமங்கலம், நூறடி சாலையில் உள்ள ஜெயின் கார்ஸ் என்ற பழைய கார்கள் வாங்கி விற்கும் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த விலை உயர்ந்த காரை வாங்க விரும்புவதாகவும், அதை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர் அந்த நிறுவன டிரைவருடன் காரை ஓட்டிப் பார்க்க சென்ற அந்த நபர், அனுமதிக்கப்பட்ட தூரத்தை கடந்து சென்றதுடன், தன்னுடன் வந்த டிரைவரின் கவனத்தை திசை திருப்பி காரை திருடி சென்று விட்டார்.

தனிப்படை அமைப்பு

இது குறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவாகி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் பெரோஷ்கான் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் காமீல் பாஷா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து மர்மநபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

வாலிபர் கைது-வாக்குமூலம்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் ராஜன் என்ற ஸ்டீபன் ராஜ் (வயது 30) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வரும் அவர், வசதியாக வாழ ஆசைப்பட்டு இவ்வாறு திருமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் நூதன முறையில் சொகுசு கார்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான ராஜனை நேற்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்