சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12.04 கோடியை வழங்க தமிழக அரசுக்கு கடிதம் மந்திரி ஜெயச்சந்திரா தகவல்
சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12.04 கோடியை வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக மந்திரி ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12.04 கோடியை வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக மந்திரி ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்குமறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளரவசி சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு தனி கோர்ட்டு, 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. தனி கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
இதில், சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, பெங்களூரு தனி கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு செலவு ரூ.12.04 கோடிமுதலில் இந்த சொத்து குவிப்பு வழக்கு தமிழ்நாடு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியது. பெங்களூருவில் இதற்காக தனி கோர்ட்டு அமைக்கப்பட்டது.
2004–05–ம் ஆண்டு முதல் 2015–16–ம் ஆண்டு வரை நடந்த விசாரணைக்கான செலவுகளை கர்நாடக அரசு செய்துள்ளது. இதற்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவு ஆகியுள்ளது. இதற்கான செலவை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் போலீஸ் துறை செய்துள்ளது.
தமிழக அரசுக்கு கடிதம்இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா கூறியதாவது:–
“ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.3.78 கோடி, சிட்டி சிவில் கோர்ட்டுக்கு ரூ.2.86 கோடி(2004–14), கர்நாடக ஐகோர்ட்டுக்கு ரூ.4.68 கோடி, போலீஸ் பாதுகாப்புக்கு ரூ.70.33 லட்சம் செலவாகியுள்ளன. இத்துடன் வக்கீல்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக கர்நாடக அரசுக்கு மொத்தம் ரூ.12.04 கோடி செலவாகி உள்ளது. இந்த செலவு தொகையை வழங்க கோரி தமிழக அரசுக்கு கர்நாடக அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்“.
இவ்வாறு மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.