பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மானியத்துடன் வீடு

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மானியத்துடன் வீடு: 1,902 பயனாளிகளை தேர்வு செய்ய ஏற்பாடு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Update: 2017-02-17 21:30 GMT
விருதுநகர்,

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மானியத்துடன் வீடு கட்ட விருதுநகர் மாவட்டத்தில் 1,902 பயனாளிகள் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு திட்டம்

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மானியத்துடன் வீடு கட்ட 1,902 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதாவது, 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பின்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட தகுதியான நபர்கள் பட்டியலில் இருந்து சரியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

எந்திரமுள்ள இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மீன்பிடி படகு உடையவர்கள். எந்திரமுள்ள மூன்று மற்றும் நான்கு சக்கர விவசாயக் கருவிகள் உடையவர்கள், விவசாய கடன் அட்டைதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ள குடும்பங்கள், அரசு பதிவு பெற்ற விவசாயம் சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள், மாதம் ரூ.10 ஆயிரமும், அதற்கு மேலும் மாத வருமானம் பெறும் உறுப்பினர் உள்ள குடும்பங்கள், வருமானவரி மற்றும் தொழில்வரி செலுத்துபவர்கள், குளிர்சாதன பெட்டி வைத்திருப்பவர்கள், தரைவழி தொலைபேசி பயன்படுத்துபவர்கள். குறைந்தது ஒரு நீரிறைக்கும் எந்திரத்துடன் 2½ ஏக்கரும் அதற்கு மேலும் பாசன வசதியுடைய நிலமுடையவர்கள், 5 ஏக்கரும் அதற்கு மேலும் இரண்டு அல்லது மூன்று பருவங்களுக்கு பாசன வசதியுடைய நிலமுடையவர்கள், 7½ ஏக்கரும் அதற்கு மேலும் நிலமுடையவர்கள் குறைந்த பட்சம் ஒரு நீரிறைக்கும் எந்திரம் உடையவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.

முறையிடலாம்

2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் பட்டியல் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தாலோ அல்லது தகுதியான நபர்களின் பெயர் விடுபட்டு இருந்தாலோ அதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள மேல்முறையீட்டு குழுவிடம் முறையீடு செய்யலாம். அதன் விபரத்தை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்