மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மேல்மலையனூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-02-17 22:00 GMT
சாலை மறியல்

மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடி கிராமத்தில் உள்ள கோவில்தெரு, ரெட்டியார் தெரு மற்றும் மெயின்ரோடு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்தது. இதனால் மேற்கண்ட கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள ஊர்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து புகார் அளித்த பின்பும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து கிராம மக்களுக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று அங்குள்ள அவலூர்பேட்டை சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு உடனே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்த தகவலின் பேரில் அவலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், முறையாக குடிநீர் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் தெரிவித்தனர். அதை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்