ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் சென்ற குடியாத்தம் நகர அ.தி.மு.க.வினர் 89 பேர் கைது

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலமாக சென்ற குடியாத்தம் நகர அ.தி.மு.க.வினர் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-02-17 20:45 GMT

குடியாத்தம்,

முன்னாள் முதல் – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலமாக சென்ற குடியாத்தம் நகர அ.தி.மு.க.வினர் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.

அ.தி.மு.க.வினர் ஊர்வலம்

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தரப்பினருக்கும், முன்னாள் முதல் – அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் கடந்த 11–ந் தேதி குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிர்வாகிகளின் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தரப்பிடம் இருந்து கட்சியையும், ஆட்சியையும் காப்பற்றவும், ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வலியுறுத்தியும் குடியாத்தம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஜெ.கே.என்.பழனி தலைமையில் 100–க்கும் மேற்பட்ட கட்சியினர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதில் துணை செயலாளர் காஞ்சனா மாலா, மாவட்ட பிரதிநிதி பரிமளா முனிசாமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி எஸ்.என்.சுந்தரேசன், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ், நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி பொருளாளர் இ.ரகுராமன், மகளிர் அணி நிர்வாகிகள் கவுரி, கலாவதி, சந்திரா, பிரேமா, வேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

89 பேர் கைது

ஊர்வலமாக புறப்பட்ட அ.தி.மு.க.வினரை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிலிப்கென்னடி தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்–இன்ஸ்பெக்டர் கிரிஜா மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி 7 பெண்கள் உள்பட 89 அ.தி.மு.க.வினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் குடியாத்தத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்