ஆம்பூரில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடம் தடுத்து நிறுத்த கலெக்டருக்கு கோரிக்கை

ஆம்பூரில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடத்தை தடுத்து நிறுத்த கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-02-17 20:30 GMT

ஆம்பூர்

ஆம்பூரில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடத்தை தடுத்து நிறுத்த கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு இடம் ஆக்கிரமிப்பு

ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. ஆஸ்பத்திரியின் முன்பகுதியில் நகராட்சி சாலை அமைந்துள்ளது. சாலைக்கும், ஆஸ்பத்திரியின் சுற்று சுவருக்கும் இடைப்பட்ட சுமார் 25 அடி அகலம், 100 அடி நீளமுள்ள காலி இடத்தை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தை சுற்றி முள்வேலி அமைத்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பிளாட் போட்டு மற்றவர்களுக்கு விற்பனையும் செய்து வருகிறார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வருவாய்துறையிடம் இருந்து பட்டாவும் பெறப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு குறித்து அறிந்த பொதுமக்கள் நகராட்சிக்கும், வருவாய்துறைக்கும், தமிழக முதல்–அமைச்சருக்கும் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.

அரசு இடத்திற்கு எப்படி பட்டா வழங்கப்பட்டது? அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணம் என்ன?, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நகராட்சி சாலை அமைந்துள்ள இடத்திற்கு எப்படி பட்டா வழங்கப்பட்டது என்றும், வருவாய்துறையினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் குறித்து பதிவேடுகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கட்டிடம் கட்டும் பணி

ஆய்வு நடத்தி பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்க அரசு அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கடந்த சில நாட்களாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கலெக்டருக்கும், தாசில்தாருக்கும் புகார் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் குறித்து ஆம்பூர் நகர நில அளவை திட்ட தாசில்தாரிடம் கேட்டதற்கு, அரசுக்கு சொந்தமான இடம், வருவாய்துறை பதிவேடுகளில் தெரு என பதிவாகியுள்ளது எனவும், கட்டிடம் கட்டப்படுகிறதா? என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிட பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்