திருவொற்றியூர் பாரதியார் நகரில் டீசல் படிமம் மீண்டும் கரை ஒதுங்கியது

திருவொற்றியூர் பாரதியார் நகரில் மீண்டும் டீசல் படிமம் கரை ஒதுங்கியது.;

Update: 2017-02-16 21:53 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பாரதியார் நகரில் மீண்டும் டீசல் படிமம் கரை ஒதுங்கியது. அதை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கப்பல்கள் மோதல்

எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த மாதம் 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு சரக்கு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டி பரவியது. கடலில் மிதந்த டீசல் படிமம் தாழ்வான பகுதியான திருவொற்றியூர் பாரதியார் நகர் கடல் பகுதியில் அதிக அளவில் கரை ஒதுங்கியது.

இதனை அகற்றும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கு பிறகு கடலில் மிதந்த டீசல் படிமம் முழுவதுமாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கடற்கரையையொட்டி கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டு இருந்த பாறைகளில் படிந்து இருந்த டீசல் படிமத்தை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, அதில் மணல் தூவப்பட்டது.

மீண்டும் கரை ஒதுங்கியது

இந்தநிலையில் காற்றின் வேகத்தில் கடலில் பிரிந்து கிடந்த டீசல் படிமம் மீண்டும் திருவொற்றியூர் பாரதியார் நகர் கடல் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. இதேபோல் ராமகிருஷ்ணாநகர், நெட்டுக்குப்பம், பெரியகுப்பம், கே.வி.கே.குப்பம், எண்ணூர் உள்பட பல்வேறு இடங்களில் கடற்கரை பகுதியில் டீசல் படிமம் கரை ஒதுங்கியது.

மீனவர்கள் கடலுக்குள் செல்லும் பாதையில் இவ்வாறு டீசல் படிமம் படிந்து காணப்படுவதால் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், கரைக்கு திரும்பி வரமுடியாமலும் சிரமப்படுகிறார்கள். மீன்பிடி வலையில் டீசல் படிமம் சிக்கினால் வலை சேதம் அடைந்து விடும் எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

கடல் சீற்றம்

இதற்கிடையில் நேற்று திருவொற்றியூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடலில் பிரிந்து கிடந்த டீசல் படிமம் ராட்சத அலைகளால் அதிகளவில் நேற்று கரைக்கு அடித்து வரப்பட்டது.

மேலும் இந்த கடல் சீற்றம் காரணமாக பைபர் படகு மற்றும் கட்டுமரங்களில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடற்கரையில் கரை ஒதுங்கிய டீசல் படிமத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்