மால்வாணியில் வி‌ஷவாயு தாக்கி 3 தமிழர்கள் பலி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது பரிதாபம்

மால்வாணியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, வி‌ஷவாயு தாக்கி 3 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-02-16 23:00 GMT

மும்பை,

மால்வாணியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, வி‌ஷவாயு தாக்கி 3 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துப்பரவு தொழிலாளிகள்

மும்பை மலாடு, மால்வாணி கேட் நம்பர் 6 பகுதியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன்(வயது44). இவரின் வீட்டருகே மூர்த்திராமசாமி(33), ராம்குமார்(27), மாயா(24) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் துப்புரவு தொழிலாளிகள் ஆவர். நேற்று காலை 8.30 மணிக்கு இவர்கள் 4 பேரும் மால்வாணி சர்ச் பகுதியில் உள்ள குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றனர்.

இதில், ராம்குமார் பக்கத்தில் உள்ள கடையில் வாளி வாங்க சென்றார்.

மயங்கி விழுந்தனர்

இந்த சமயத்தில் மாயாவும், மூர்த்தி ராமசாமியும் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்ய தொடங்கினர். இதில், அவர்கள் திடீரென வி‌ஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர். 2 பேரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்ததை பார்த்து காசிவிஸ்வநாதன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் 2 பேரையும் மீட்க தொட்டிக்குள் இறங்கினார்.

இந்தநிலையில் அவரும் தொட்டிக்குள் மயங்கினார். இதுகுறித்து அந்த பகுதியில் நின்ற பெண் ஒருவர் ராம்குமாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

ஒருவர் உயிர் தப்பினார்

இதைக்கேட்டு ராம்குமார் அலறி அடித்து கொண்டு அங்கு ஓடிவந்தார். அவர் தொட்டிக்குள் இறங்கி காசிவிஸ்வநாதனை வெளியே தூக்கிக்கொண்டு வந்தார். இந்தநிலையில் அவரும் மயங்கினார். தகவல் அறித்து அந்த பகுதியில் இருந்த தமிழர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முதலில் காசிவிஸ்வநாதன், ராம்குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு காசிவிஸ்வநாதன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராம்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்கள் மீட்பு

இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து மூர்த்திராமசாமி, மாயா ஆகியோரின் உடல்களை பிணமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காந்திவிலியில் உள்ள சதாப்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மால்வாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 நாளில் நிச்சயதார்தம்

பலியானவர்களில் காசிவிஸ்வநாதன், மூர்த்தி ராமசாமிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மாயாவிற்கு திருமணத்திற்காக பெண் பார்க்கப்பட்டு இருந்தது. இன்னும் 15 நாட்களில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் இந்த சோகம் நடந்துள்ளது. வி‌ஷவாயு தாக்கி பலியானவர்கள் சேலம் மாவட்டம் உமயில்புரம், கல்தகனூர், கொத்தாம்பாடி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

3 தமிழர்கள் வி‌ஷவாயு தாக்கி பலியான சம்பவம் மலாடு, மால்வாணி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்