வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மற்றொரு விபத்தில் அரசு கார் தலைகீழாக கவிழ்ந்தது.

Update: 2017-02-16 22:45 GMT
வாடிப்பட்டி,

2 பேர் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் அர்ச்சுனன்(வயது 19). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் ஜான்முருகன் மகன் சிவா (20). இவர் ஒருங்கிணைந்த ஜவுளிபூங்காவில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சேகர் மகன் தினேஷ்குமார் (29) இவர் கச்சைகட்டிக்கு வந்திருந்தார்.

நண்பர்களான 3 பேரும் நேற்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கச்சைகட்டியிலிருந்து ஆண்டிபட்டி பங்களாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு லாரி வந்தது. அந்த லாரியை அதே ஊரை சேர்ந்த பழனி மகன் மதுரைவீரன் (47) என்பவர் ஓட்டி வந்தார். பூச்சம்பட்டி பரிவு என்ற இடத்தின் அருகே சாலை வளைவில் வந்த போது, எதிர்பாராத நிலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

அதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அர்ச்சுனன், தினேஷ்குமார் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள். படுகாயமடைந்த சிவா மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மதுரைவீரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசு கார் கவிழ்ந்தது

மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல உதவி இயக்குனர் சித்ரா, உதவி பொறியாளர் ராஜாமணி ஆகியோர் மதுரையிலிருந்து வாடிப்பட்டிக்கு அரசு காரில் சென்றனர். அந்த காரை மதுரையை அடுத்த முத்துப்பட்டியை சேர்ந்த டிரைவர் ராமச்சந்திரன் என்பவர் ஓட்டினார். மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி பங்களா வாடிப்பட்டி பிரிவு நகர்புறச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு கோதுமை மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஜேம்ஸ் (25) என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை கார் மீது வேகமாக மோதியது.

அதில் கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்