சாலை பணிக்காக அகற்றியபோது எம்.ஜி.ஆர். சிலை சேதம் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

விருத்தாசலம் அருகே சாலை பணிக்காக அகற்றியபோது எம்.ஜி.ஆர். சிலை சேதமடைந்தது. இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-16 23:00 GMT
கம்மாபுரம்,

சாலை அமைக்கும் பணி

விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தாங்கால் கிராமத்தில் விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த சாலையை அகலப்படுத்தும் பணி அப்பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் பள்ளம் தோண்டி சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக எம்.ஜி.ஆர். சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சிலை சேதமடைந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து அறிந்த ஊத்தாங்கால் கிராம மக்கள், எம்.ஜி.ஆர். சிலை இருந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், சேதமடைந்த எம்.ஜி.ஆர். சிலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை ஏற்ற கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்