தேசிய ஊரக வேலை திட்டத்தில் 150 நாட்கள் வேலை கலெக்டர் கருணாகரன் தகவல்

நெல்லை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-16 19:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊரக வேலை திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குடும்பத்துக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்களின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாய பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் வேலை முடித்தவர்களுக்கு விவசாய பணி இல்லாததால் போதிய வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கிராமப்புற மக்களின் வறுமையை போக்கிட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வழங்கப்படுகிற வேலையை, 150 நாட்களாக உயர்த்தி தரவேண்டும் என்று மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதை மத்திய அரசு ஏற்று, 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது.

பணிக்கு வரலாம்

இந்த அனுமதியை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதியில் வாழும் விவசாய கூலி தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 100 நாட்கள் வேலை முடித்தவர்கள், வருகிற 31-3-2017 வரை பணிக்கு வரலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்