போடியில் பதற்றம்: ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் மீது தாக்குதல்; நாற்காலிகள் உடைப்பு

போடியில், ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அலுவலகம் மீது தாக்குதல் தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகரில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. நேற்று;

Update: 2017-02-16 23:00 GMT

போடி,

போடியில், ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. நாற்காலிகள் உடைக்கப்பட்டன.

அலுவலகம் மீது தாக்குதல்

தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகரில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. நேற்று மாலை 30 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்து, அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து சேதப்படுத்தினர்.

பின்னர் அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் போடப்பட்டு இருந்த நாற்காலிகளை உடைத்தனர். இதனை பார்த்து தடுக்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் நகர மாணவரணி செயலாளர் சேசு என்ற ராஜ்வேலை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலா ஆதரவாளர் வீடு மீது கல்வீச்சு

இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள சசிகலா ஆதரவாளரான நகர செயலாளர் பாலமுருகன் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் வீட்டின் முன்பு நின்றிருந்த அவருடைய காரின் பக்கவாட்டு கண்ணாடி சேதம் அடைந்தது.

அப்போது வெளியே வந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி மீது கல் விழுந்தது. இதில் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் செய்திகள்