ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தொழுநோய் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தோல் பால்வினைநோய் மற்றும் தொழுநோய் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.;

Update: 2017-02-15 22:45 GMT
நாகர்கோவில்,

சிறப்பு சிகிச்சை பிரிவு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் விபத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு பின்புறம் தோல் பால்வினைநோய் மற்றும் தொழுநோய் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பிரிவை கல்லூரி டீன்  ரவீந்திரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தோல் பால்வினை நோய் மற்றும் தொழுநோய் சிகிச்சை பிரிவில் 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பகல்நேர மையம்

மேலும் தோல் நோய்களுக்கு குறுகிய கால சிகிச்சை அளிக்கும் விதமாக “டே கேர் சென்டர்” (பகல்நேர மருத்துவ கவனிப்பு மையம்) தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தோல்நோயாளிகள் பகல் நேரங்களில்  சிகிச்சை பெற்று திரும்பலாம்.

மேலும் தொழுநோயாளிகளுக்கு நரம்புத்தளர்ச்சி மற்றும் நரம்பு பாதிப்பு ஆகியவற்றால் கை, கால் சிறிது வளைந்துவிடும். இதற்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மானாமதுரை, செங்கல்பட்டு, சென்னை போன்ற பகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள தொழுநோயாளிகளும், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த தொழுநோயாளிகளும் இந்த அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதிவிரைவில் வந்து விடும்.

இவ்வாறு டீன் ரவீந்திரன் பேசினார்.

முன்னதாக குமரி மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வசந்தி தொழுநோய் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் பிரவீன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் மேரிவிஜயா, உதவி உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், டாக்டர்கள் ஜெயலால் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இந்த சிறப்பு சிகிச்சை பிரிவின் செயல்பாடுகள், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த செயல் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்