பெங்களூரு கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வேலூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட சசிகலா

பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைய காரில் சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வேலூரை அடுத்த அகரம்சேரி அருகே மதிய உணவு சாப்பிட்டார்.

Update: 2017-02-15 23:30 GMT
அணைக்கட்டு,

பெங்களூரு சென்றனர்


சொத்துகுவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடையவும் உத்தரவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகிய 2 பேரும் நேற்று பகலில் சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். அவர்கள் வேலூர் வழியாக காரில் சென்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு அவர்கள் வேலூரை கடந்து சென்றனர். சுமார் 2.50 மணிக்கு அவர்கள் வேலூரை அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை அடைந்தனர். ஆனால் அ.தி.மு.க. வினர் ஒருசிலர் மட்டுமே அவர்களை காணவந்திருந்தனர். பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். சுங்கச்சாவடியை கடந்து சென்ற அவர்கள் கிருஷ்ணகிரியில் மதிய உணவு சாப்பிட இருப்பதாக கூறப்பட்டது.

மதிய உணவு சாப்பிட்டார்


ஆனால் கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற அவர்களுடைய கார் திடீரென பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகே ரோட்டின் ஓரமாக திடீர் என்று நிறுத்தப்பட்டது. காரில் இருந்தபடியே சசிகலா, இளவரசி ஆகியோர் 3 மணியளவில் மதிய உணவு சாப்பிட்டனர். இதை அறிந்த பொதுமக்கள் சசிகலாவை பார்க்க திரண்டனர். சுமார் 15 நிமிடத்தில் அவர்கள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து மீண்டும் பெங்களுருவுக்கு புறப்பட்டனர்.

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது அங்கு சசிகலாவை காண ஏராளமான பொதுமக்கள் சாலையோரத்தில் காத்திருந்தனர். சசிகலாவை பார்த்ததும் அவர்கள் சசிகலாவை வாழ்த்தி கோ‌ஷமிட்டனர். அப்போது சசிகலா காரில் இருந்தபடி சிரித்துகொண்டே கை அசைத்தபடி சென்றார். பின்னர் ஆம்பூர் பை–பாஸ் சாலை சந்திப்பில் வந்த போதும் சசிகலாவை காண ஏராளமான கூட்டம் கூடியது. அந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் இருப்பதாலும், ஏராளமான பொதுமக்கள் கூடியதாலும் சசிகலாவின் கார் மெதுவாக சென்றது. அப்போதும் பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி சென்றார்.

மேலும் செய்திகள்