மனைவி அடித்துக்கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை திருவாரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை அடித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update:2017-02-16 04:30 IST
திருவாரூர்,

அடித்துக்கொலை

திருவாரூர் அருகே விளமல் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 51). தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (31). இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதி வீட்டில் சுமதி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து சுமதியின் கணவர் செல்வராஜிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜ் தனது மனைவி சுமதியை குடும்பத்தகராறில் அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றி செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை திருவாரூர்் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி செந்தில்குமரேசன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் மனைவி சுமதியை கொலை செய்த குற்றத்திற்காக செல்வராஜிக்கு இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், தடயங்களை மறைத்ததற்காக இந்திய தண்டனை சட்டம் 202 பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ, 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார், செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்