திருவாரூரில் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மனுநீதிசோழன் மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை

திருவாரூரில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மனுநீதிசோழன் மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-02-15 22:45 GMT
திருவாரூர்,

மணிமண்டபம்

பசுவின் கன்றை கொன்ற தனது மகன் வீதிவிடங்கனை, தேர்க்காலில் இட்டு கொன்று பசுவுக்கு நீதி வழங்கியவர் மனுநீதிச்சோழன். இதற்கு ஆதாரமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் வடக்கு திசையில் பசுவிற்கு நீதி வழங்கிய கதையை தெரிவிக்கும் வகையில் கருங்கற்கள் மூலம் செதுக்கப்பட்டு, ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

திருவாரூரில் நீதியை நிலை நாட்டிய மனுநீதிசோழனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருவாரூர் பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்காவில் மணி மண்டபம் கட்ட 247 சதுர மீட்டரில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு் மாதம் 20-ந் தேதி பணிகள் தொடங்கியது.

கட்டுமான பணிகள்

ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் மனுநீதி சோழன் மணிமண்டபம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு மனுநீதி சோழன் சிலையும் நிறுவப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. ஆனால் இதுவரை மணிமண்டபம் திறக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் தங்களின் பொழுதை கழிக்கும் இடமாக சோமசுந்தரம் பூங்கா திகழ்ந்து வந்தது. மனுநீதிசோழன் மணிமண்டபம் கட்டுமான பணிகள் பூங்காவில் தொடங்கியதில் இருந்து உள்ளே செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பூங்காவி்ல் இருந்த செடிகள் கட்டுமான பணிகளால் அழிக்கப்பட்டன.

பொதுமக்கள் கோரிக்கை

எனவே மனுநீதிசோழன் மணிமண்டபம் உடனடியாக திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். சோமசுந்தரம் பூங்காவை பழைய நிலையில் செடிகள் பராமரித்து அழகுப்படுத்தி குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள் செய்து தர வேண்டும் என திருவாரூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்