நாகை மாவட்டத்தில், 25-ந்தேதிக்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

நாகை மாவட்டத்தில், வருகிற 25-ந்தேதிக்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-02-15 22:45 GMT
நாகப்பட்டினம்,

ஆய்வுக்கூட்டம்

நாகை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையின் தீர்ப்பில் 13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இதர மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

25-ந்தேதிக்குள்

எனவே ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறையினரும் தமக்கு சொந்தமான அலுவலக வளாகங்கள், நிலப்பரப்புகள், சாலை ஓரங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வருகிற 25-ந்தேதிக்குள் முற்றிலுமாக அப்புறப்படுத்திட வேண்டும். மேலும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள், பேரணிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்