தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் நாட்டு கத்தரிக்காய் விலை உயர்வு

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் நாட்டு கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது.

Update: 2017-02-15 22:45 GMT
தஞ்சாவூர்,

நாட்டு கத்தரிக்காய்

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 75-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தஞ்சை மட்டுமின்றி ஓசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு, மத்தியபிரதேசம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது. நாட்டு கத்தரிக்காய் வரத்து மிக குறைவாக இருப்பதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ நாட்டு கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உஜலா, பால்கறி வகை கத்தரிக்காய் வரத்து அதிகமாக இருப்பதால் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.24-ஆக குறைந்தது.

விலை மேலும் உயரும்

ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.20 வரையும், முட்டைக்கோஸ் ரூ.10 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.24 வரை விற்பனை செய்யப்பட்ட கேரட் விலை ரூ.16-ஆக குறைந்தது. இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறும்போது, தற்போதைய நிலவரப்படி நாட்டு கத்தரிக்காய் விலை மட்டுமே உயர்ந்து காணப்படுகிறது. அதன் வரத்து குறைவாக இருக்கிறது. விலை அதிகமாக இருப்பதால் நாட்டு கத்தரிக்காயை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. உஜலா, பால்கறி வகை கத்தரிக்காய் வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைவாக இருக்கிறது. இந்த வகை கத்தரிக்காய் வரத்து குறைந்தால் கத்தரிக்காய் விலை மேலும் உயரும். மற்ற காய்கறிகளின் விலை அதிகரிக்கவும் இல்லை. குறையவும் இல்லை. வல்லம், திருவையாறு போன்ற பல்வேறு பகுதிகளில் வார சந்தை திறக்கப்பட்டுள்ளதால் காமராஜர் மார்க்கெட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றனர். 

மேலும் செய்திகள்