காவலாளி கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

காவலாளி கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

Update: 2017-02-15 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இளங்கோவன் பதவி உயர்வு பெற்று நாகை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக தமிழ்ச்செல்வன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். புதிய துணை போலீஸ் சூப்பிரண்டை இன்ஸ்பெக்டர்கள் சிட்டிபாபு, மணிவேல், ராஜேந்திரன், சோமசுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித் தனர்.

இதையடுத்து அவர், தஞ்சை நகரில் குற்றங்களை தடுப்பது குறித்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை நகரில் திருட்டு, வழிப்பறி, கொலை போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை காவலாளி கொலை வழக்கு தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக என்னை எந்த நேரத்திலும் நேரில் சந்திக்கலாம். மேலும் 94434-11154 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோரை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் செய்திகள்