மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள் கணக்கெடுக்க நிதி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

Update: 2017-02-15 21:30 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

குழந்தை தொழிலாளர்கள்

இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை வேலைக்கு சேர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை பெரும்பாலான பெற்றோர் உணர்ந்திருந்தபோதிலும், தமிழகத்தின் சில இடங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலையில் சேர்த்துவிடுகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்திலும் நகர் பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் ஓட்டல்கள், கடைகள், தொழிற்கூடங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையங்களிலும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் செல்போன் உபகரணங்கள், ஆபரணங்களை விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் தொழிலில் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்கும் மாணவ, மாணவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உண்டு உறைவிட பள்ளி, குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டபோதும் குழந்தை தொழிலாளர்களை முழுமையாக ஒழிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு தொடர் சோதனை அவசியமானதாக இருக்கிறது. எனவே, திண்டுக்கல் நகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடிக்க அதிரடி சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அறிவழகனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–

நிதி ஒதுக்கீடு

குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, மத்திய அரசு சார்பில் குழந்தை தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 5 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இவர்களில் எத்தனை பேர் பள்ளிகளில் படிக்கிறார்கள்? மீதம் இருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என கணக்கெடுக்க இருக்கிறோம்.

அதன்பிறகு குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்ற கணக்கெடுப்பு பணியை தொடங்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்