மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்

மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நேற்று மாலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-02-15 22:00 GMT
சாலை அமைக்கும் பணி

மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நான்கு வழிச்சாலை மானாமதுரை புதிய பஸ் நிலைய நுழைவு வாயிலை ஒட்டி அமைகிறது. இதற்காக பஸ் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. மேலும் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே தொடங்கி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கீழமேல்குடி விலக்கு வரை அமைகிறது. பாலம் கட்டுமான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, தற்போது பாலம் கட்டுமான பணிக்காக சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இந்த பாலத்திற்கு இணைப்பு சாலையான கீழமேல்குடி விலக்கில் இருந்து புதிய பஸ் நிலைய பகுதியை கடந்து வழிவிடு முருகன் கோவில் வரை சாலைப்பணிகள் நேற்று முதல் முழுவீச்சில் தொடங்கியது. அதன்படி பஸ் நிலைய நுழைவு வாயிலை அகற்றிவிட்டு, அங்கு சாலை பணிகள் மேற்கொள்ள வசதியாக பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை முதல் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதி வழியாக அனைத்து பஸ்களும் உள்ளே வந்து, அதே வழியாக மீண்டும் திரும்பி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலை பணிகள் முடிவடையும் வரை இந்த மாற்று ஏற்பாடுகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்