நகராட்சி சிறுவர் பூங்காவில் திருவள்ளுவர் சிலை உடைப்பு

ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நகராட்சி சிறுவர் பூங்காவில் திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. இதை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2017-02-15 22:15 GMT
கோரிக்கை

ராமேசுவரம் பஸ் நிலையம் பின்புறம் நீதிமன்றத்தின் எதிரில் அமைந்துள்ளது திருவள்ளுவர் அய்யன் சிறுவர் பூங்கா. இந்த சிறுவர் பூங்காவானது நகராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.10 லட்சம் நிதியில் இருந்து புதிதாக அமைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி மூலம் இந்த பூங்கா மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டது. இந்த சிறுவர் பூங்காவின் மைய பகுதியில் கருங்கல்லால் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை, சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் விளையடுவதற்காக ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் சிறுவர் பூங்காவா கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்துகிடக்கின்றன. மேலும் பூங்காவை சுற்றியுள்ள தடுப்புச்சுவர்கள் பல இடங்களில் இடிந்துள்ளதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுபானம் அருந்தும் இடமாக மாறி விட்டது. இதனால் இந்த பூங்காவிற்கு பொது மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவதையும் முழுமையாக தவிர்த்தனர்.

இந்தநிலையில் இந்த பூங்காவின் மைய பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து அவமதிக்கும் வகையில் மாற்றி வைத்து சென்றுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனே சீரமைக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார்

இதுபற்றி நகராட்சி ஆணையாளர் ஜெயராம்ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– பஸ் நிலையம் அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். சிறுவர் பூங்காவை பராமரிக்க உரிய நிதி அரசிடம் கேட்கப்பட்டு நிதி ஒதுக்கிய பின்சிறுவர் பூங்கா முழுமையாக மீண்டும் புனரமைக்கப்படும். விரைவில் திருவள்ளுவர் சிலை சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்