நீர்ப்பாசன கருவிகள் அமைத்திட 100 சதவீத மானியம்

நீர்ப்பாசன கருவிகள் அமைத்திட 100 சதவீத மானியம் சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Update: 2017-02-15 21:30 GMT
விருதுநகர்

நீர்ப்பாசன கருவிகள் அமைத்திட 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மானியம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;–

தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் கிணறு, ஆழ்துளை கிணறு உள்ள இடங்களில் குறைந்த அளவு நீரினை பயன்படுத்தி கோடையில் பயிரிடப்படும் பயறு வகைப் பயிர்களில் அதிக மகசூல் பெற்றிட மழைத்தூவான் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற நீர்ப்பாசன கருவிகள் அமைத்திட வேளாண்துறை சார்பில் மானியம் தரப்படவுள்ளது. இதன்படி மழைத்தூவான் அமைப்பதற்கு எக்டேருக்கு ரூ.31 ஆயிரத்து 600–ம் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு எக்டேருக்கு ரூ.11 ஆயிரத்து 600–ம் 100 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆவணம்

அதன்படி மேற்படி நீர்ப்பாசன கருவிகள் அமைப்பதற்கு தேவையான ஆவணங்களான சிறு, குறு விவசாயிகள் சான்று, சிட்டா, அடங்கல் ஆகியவைகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் நிலத்தின் மண் பரிசோதனை மற்றும் நீர் மாதிரி ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் சொட்டு நீர்ப்பாசனத்திற்காக மானியம் பெறும் சிறு, குறு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க வழிவகை செய்து கொடுக்கப்படும்.

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம். சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதன் மூலம் குறைந்த நீர்வளத்தில அதிக லாபம் பெற முடியும். எனவே விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பயறு வகைகள் மாதிரி செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்துக்கான இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்