சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தி.மு.க. இளைஞர் அணி வரவேற்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் வரவேற்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவையை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகில் உள்ள ஜி.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ்பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சன் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
வேதனைக்குரியதுஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் குடியிருக்கும் மீனவ சமுதாய மக்கள் உள்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியதோடு அவர்கள் பயன்படுத்தும் பொருட்களையும் சேதப்படுத்திய காவல் துறையின் அராஜக போக்கினை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக விவசாயிகள் இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியினால் பாதிக்கப்பட்டதால் இதுவரை பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு பலியான குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த நிவாரண தொகையும் அளிக்கப்படாதது மிகவும் வேதனைக்கு உரியதாகும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்புபவானி ஆறு மற்றும் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலை பெறாமல் இருப்பது கண்டிக்கதக்கது. எனவே மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘உதய்’ மின்சார திட்டத்தால் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படக்கூடாது. இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்பட 3 பேருக்கு சிறை தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளதின் மூலம் பொது வாழ்வில் நீதியும், நேர்மையும் நிலை நாட்டப்பட்டுள்ளது. பொது வாழ்வை தூய்மைப்படுத்தும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிப்பது என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தளபதி முருகேசன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிரஸ் மணி, கண்ணம்பாளையம் நகர பொறுப்பாளர் கே.என்.சண்முகம் நா.முருகவேல் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து சொல்ல விரும்பவில்லைகூட்டம் முடிந்து பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?.
பதில்:– தி.மு.க.வின் செயல் தலைவர் நான் தான். அப்படி ஒன்றும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது.
கேள்வி:– அ.தி.மு.க.வில் தினகரனுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதே?
பதில்:– அது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.