தற்கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத வீட்டுவசதி வாரியத்துறை அதிகாரிக்கு பிடிவாரண்டு

தற்கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத வீட்டுவசதி வாரியத்துறை அதிகாரிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2017-02-15 21:30 GMT
பெண் தற்கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 37). இவருக்கும் கோமதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2008–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர், வினோத்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றித்திரிந்தார். மனைவி கோமதியையும் துன்புறுத்தி வந்தார். இதனால் மனம் உடைந்த கோமதி கடந்த 31–1–2011 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோமதியை தற்கொலைக்கு தூண்டியதாக வினோத்குமார் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

அதிகாரிக்கு பிடிவாரண்டு

இந்த வழக்கு தொடர்பாக அப்போது கோபி ஆர்.டி.ஓ. வாக இருந்த மீனா பிரியதர்ஷினி விசாரணை நடத்தினார். வழக்கில் அவர் சாட்சியாகவும் உள்ளார். அவர் தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறையில் மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணியில் இருக்கிறார்.

இந்தநிலையில் ஈரோடு மகளிர் கோர்ட்டில் சாட்சி விசாரணைக்காக கடந்த 7–ந் தேதி ஆஜராக வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரி மீனா பிரியதர்ஷினிக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. சாட்சி சொல்ல அவர் வரவில்லை. இதனால் 15–ந் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் நேற்றும் அவர் ஆஜராகவில்லை. எனவே அதிகாரி மீனாபிரியதர்ஷினிக்கு சாட்சி கூற வருவதற்கான பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி என்.திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், சத்தியமங்கலம் போலீசார் வருகிற 22–ந் தேதி அதிகாரி மீனாபிரியதர்ஷினியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்