குற்றம்சாட்டப்பட்டவரிடம் கோர்ட்டு சம்மனை வழங்க பெண் மனுதாரரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது

குற்றம்சாட்டப்பட்டவரிடம் கோர்ட்டு சம்மனை வழங்க பெண் மனுதாரரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுவை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.

Update: 2017-02-15 21:06 GMT
சிவமொக்கா,

குற்றம்சாட்டப்பட்டவரிடம் கோர்ட்டு சம்மனை வழங்க பெண் மனுதாரரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டுவை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.

மனுதாரரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்

சிவமொக்கா வினோபா நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக இருப்பவர் மகேஷ்வரப்பா. இவர் கடந்த 3 மாதங்களாக சிவமொக்கா 1-வது ஜூடிசியல் கோர்ட்டு வளாகத்தில் குற்றவாளிகள் மீது நடத்தப்படும் விசாரணையில் நீதிபதிகள் கொடுக்கும் சம்மனை மனுதாரரிடம் கொடுக்கும் பணியை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிவமொக்கா புறநகர் நவுலே பகுதியை சேர்ந்த ஸ்ரேதேவி என்பவர், இந்த கோர்ட்டில் ஒருவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர் மீது நீதிபதி சம்மன் பிறப்பித்தார். இந்த சம்மனை குற்றம்சாட்டப்பட்டவரிடம் கொடுக்க மகேஷ்வரப்பா, மனுதாரரான ஸ்ரேதேவியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரும் படி கேட்டு உள்ளார்.

கையும், களவுமாக பிடித்தனர்


இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரேதேவி இது குறித்து சிவமொக்கா ஊழல் தடுப்பு படையினரிடம் புகார் கொடுத்தார். இந்தநிலையில், ஊழல் தடுப்பு படையினர் கூறிய அறிவுரையின்படி நேற்று முன்தினம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை ஸ்ரேதேவி, மகேஷ்வரப்பா விடம் கொடுத்தார். அதனை மகேஷ்வரப்பா அவரிடம் இருந்து வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு படையினர் மகேஷ்வரப்பாவை கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி சிவமொக்கா ஊழல் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, கைதான மகேஷ்வரப்பாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்