பா.ஜனதா மேலிடத்திற்கு பணம் கொடுத்ததாக சி.டி. வெளியான விவகாரம் எடியூரப்பா, அனந்தகுமார் மீது லோக் அயுக்தா போலீசில் புகார்

முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் மேலிடத்திற்கு ரூ.1,000 கோடி கொடுத்ததாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.;

Update: 2017-02-15 20:56 GMT

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் மேலிடத்திற்கு ரூ.1,000 கோடி கொடுத்ததாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறி இருந்தார். அதன்பிறகு, எடியூரப்பாவும், மத்திய மந்திரி அனந்தகுமாரும் பேசும் சி.டி. ஒன்றை காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டனர்.

அந்த சி.டி.யில் எடியூரப்பாவிடம் அனந்தகுமார் பேசும் போது சித்தராமையா ரூ.1,000 கோடியை மேலிடத்திற்கு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு கூறினீர்கள். ஆனால் நமது கட்சி (பா.ஜனதா) மேலிடத்திற்கு நீங்களும் கருப்பு பணம் கொடுத்துள்ளீர்களே, நானும் கொடுத்துள்ளேன் என்று கூறி இருந்தார். இந்த சி.டி. வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பா.ஜனதா மேலிடத்திற்கு கருப்பு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி அனந்தகுமார் மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்செயா என்பவர் லோக் அயுக்தா போலீசில் நேற்று புகார் கொடுத்துள்ளார். மேலும் எடியூரப்பாவும், அனந்தகுமாரும் பேசும் சி.டி. ஆதாரங்களும் லோக் அயுக்தா போலீசாரிடம் தனஞ்செயா வழங்கியுள்ளார். அந்த புகாரையும், சி.டி.யையும் லோக் அயுக்தா போலீசார் பெற்றுக் கொண்டனர். ஆனால் புகார் குறித்து லோக் அயுக்தா போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்