பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க மேம்பாலங்கள் அமைக்கப்படும் முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

Update: 2017-02-15 22:00 GMT

பெங்களூரு,

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

புதிய மேம்பாலம் திறப்பு

பெங்களூரு பத்மநாபநகர் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. அந்த மேம்பாலத்தின் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெங்களூருவில், போக்குவரத்து நெரிசல் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கு தீர்வுகாண ரிங்ரோடுகளில் மேம்பாலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, பெங்களூருவில் 5 மேம்பாலங்கள் புதிதாக அமைக்க அரசு தீர்மானித்தது. அவற்றில் ஒரு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

தற்போது பத்மநாபநகர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி 2014–ம் தொடங்கப்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கித்தூர் ராணி சென்னம்மாவின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மைசூரு ரோட்டில் உள்ள சில்க் போர்ட்டு ஜங்‌ஷன் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வாகன ஓட்டிகள் செல்ல இந்த மேம்பாலம் பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் 3 மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பெங்களூரு நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு தாராளமான நிதியை ஒதுக்கி வருகிறது.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மேம்பாலம் திறப்பு விழாவில் மந்திரிகள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், மாநகராட்சி மேயர் பத்மாவதி, முன்னாள் துணை முதல்–மந்திரி ஆர்.அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்