டி.டி.வி. தினகரனுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியா? அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் கருப்பசாமி பாண்டியன் பேட்டி

டி.டி.வி.தினகரனுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கருப்பசாமிபாண்டியன் கூறினார்.

Update: 2017-02-15 21:30 GMT

நெல்லை,

கட்சிக்கு துரோகம் செய்ததாக நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமிபாண்டியன் கூறினார்.

இது குறித்து அவர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பதவியை ராஜினாமா செய்கிறேன்

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது என்னை போன்றவர்கள் ஜெயலலிதாவை ஆதரித்தோம். அவர் பிரிந்து கிடந்த கட்சியை ஒன்றாக்கி தனது திறமையாலும், உழைப்பாலும் கட்சியை வளர்த்தார். இதனால் அ.தி.மு.க. உச்சநிலைக்கு சென்றது. ஆட்சியிலும் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சசிகலாவின் குடும்ப சொத்தாக அ.தி.மு.க.வை ஆக்க முயற்சி செய்வதை தன்மானமுள்ள எந்த தொண்டனாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான். எனவே சசிகலாவால் எனக்கு வழங்கப்பட்ட அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். என்னை கேட்காமலேயே எனக்கு அந்த பதவி வழங்கினார்கள். நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எந்த பணியும் செய்யவில்லை. எனவே அந்த பதவியை நான் ஏற்கவில்லை.

துரோகம் செய்தவர்கள்...

கடந்த 2011–ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்கள் கட்சிக்கு துரோகம் செய்ததாக நீக்கப்பட்டார்கள். அப்படி நீக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன், அண்ணன் மகன் வெங்கடேஷ். ஆனால் நீக்கப்பட்டவர்களில் சசிகலாவை தவிர மற்ற யாரையும் ஜெயலலிதா கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் சசிகலா பொதுச்செயலாளரானவுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

கட்சியில் சேர்க்கப்பட்ட உடனேயே டி.டி.வி.தினகரனுக்கு, பொதுச்செயலாளருக்கு அடுத்த பதவியான துணைபொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. வெங்கடேஷ்சுக்கும் பதவி வழங்க உள்ளனர். இதில் இருந்து அ.தி.மு.க.வை சசிகலாவின் குடும்ப சொத்தாக மாற்றப்பட்டு வருகிறது தெரிகிறது. இதை மானமுள்ள எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

நான் தீபா அணிக்கோ, முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் அணிக்கோ ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர்களும் என்னிடம் ஆதரவு கேட்கவில்லை. நான் கட்சியில் எந்த அணிக்கு செல்வது என்றாலும் நானாகவே முடிவு செய்வது கிடையாது. என்னை நம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் லட்சகணக்கான எனது அனுதாபிகள் உள்ளனர். அவர்களிடம் கருத்து கேட்டு தான் முடிவு எடுக்கமுடியும்.

சசிகலாவுக்கு....

நான் இந்த இயக்கத்தை விட்டு தி.மு.க.விற்கு சென்றபோதும், மீண்டும் நான் தாய் கழகத்திற்கு வந்தபோதும் அவர்கள் என்னோடு இருந்தார்கள். அவர்களிடம் கருத்துகேட்ட பின்னர் எனது தன்மானம் பேணி பாதுகாக்கின்ற இடம் எது என்பதை அறிந்து அங்கு எனக்கு உரிய பதவி மற்றும் கவுரவம் வழங்கப்படுகிற இடத்தை ஏற்றுக்கொள்வேன். எனக்கு வழங்கப்படுகிற பொறுப்பால் தென்பகுதி மக்களுக்கு நன்மை கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி இல்லை. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியை வழிநடத்த முழுதகுதி உள்ளது. அவர் சிறந்த முதல்–அமைச்சராக பணியாற்றி வருகிறார் என்று சசிகலாவின் கணவர் நடராஜனே தெரிவித்து உள்ளார். பன்னீர்செல்வம் புயல், குடிநீர், ஜல்லிக்கட்டு பிரச்சினையில் திறம்பட செயல்பட்டார். சசிகலா சொல்வதை யாரும் கேட்கமாட்டார்கள். அவர் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றதே செல்லுமா என்ற நிலை உள்ளது. அப்படி இருக்க அவரால் யாரையும் நீக்கமுடியாது.

நல்ல வழி கிடைக்கும்

ஜெயலலிதா என்னை அழைத்து சொன்ன உறுதிமொழியை ஏற்று அ.தி.மு.க.விற்கு வந்தேன். விதி அவர் மறைந்துவிட்டார். இதனால் நானும், லட்போபலட்சம் தொண்டர்களும் நெற்கதியாக நிற்கிறோம். சீக்கிரம் நல்ல வழி கிடைக்கும். தி.மு.க.வில் இருந்தபோது நான் எனக்கு கொடுத்த பொறுப்பில் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றினேன். நான் ஸ்டாலின் கட்சியிலும், ஆட்சியிலும் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாக கூறினேன். இதனால் அழகிரியும், கனிமொழியும் என்னை குற்றம்சாட்டி கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். நான் தற்போது அ.தி.மு.க.வில் உள்ளேன். தி.மு.க.வில் இணைவீர்களா? என்ற பேச்சிற்கே இடம் இல்லை.

தமிழக ஆளுநர் நல்ல முடிவு எடுத்து சகிகலாவை முதல்–அமைச்சராக பதவி ஏற்றச்செய்யாமல் தமிழகத்தின் மானத்தை காப்பாற்றினார். ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பதை அவர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து நல்லமுடிவு எடுப்பார்.

இவ்வாறு வீ.கருப்பசாமிபாண்டியன் கூறினார்.

மேலும் செய்திகள்