டி.என்.ஏ. பரிசோதனை மூலம் ரெயில் விபத்தில் பலியானவர்களின் அடையாளத்தை கண்டறிய திட்டம்

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் ரெயில் விபத்தில் பலியானவர்களின் அடையாளத்தை கண்டறிய ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடையாளம் தெரியாத உடல்கள் மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் ரெயில

Update: 2017-02-14 22:18 GMT

மும்பை,

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் ரெயில் விபத்தில் பலியானவர்களின் அடையாளத்தை கண்டறிய ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அடையாளம் தெரியாத உடல்கள்

மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் ரெயில் விபத்துகளில் சிக்கி சராசரியாக 11 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு ரெயில் விபத்துகளில் சிக்கி 3 ஆயிரத்து 208 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 ஆயிரத்து 177 பேரின் உடல்கள் மட்டும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

1,091 பேர் யார் என்பதை கண்டுபிடிக்கப்படவில்லை. ரெயில்விபத்தில் உயிரிழப்பவரின் உடல்கள் 7 அல்லது 8 நாட்கள் மட்டுமே பாதுகாப்படும். அந்த காலக்கட்டத்திற்குள் அந்த உடலை உரிமைகோர யாரும் வரவில்லை என்றாலோ, அல்லது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ போலீசாரே அந்த உடலை தகனம் செய்து விடுவார்கள்.

டி.என்.ஏ. சோதனை

ரெயில்வே போலீசார் அடையாளம் தெரியாத உடல்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க பலியானவர்களின் புகைப்படங்களை ரெயில்நிலையங்களில் பேனராக வைத்தனர். மேலும் ரெயில்வே இணையப்பக்கத்திலும் பதிவேற்றம் செய்தனர். இந்தநிலையில் அடையாளம் தெரியாத உடல்களில் இருந்து டி.என்.ஏ.வை சேகரித்து வைக்க ரெயில்வே போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதன் மூலம் பலியானவரின் உறவினர் யாராவது ரெயில்வே போலீசாரை அணுகினால் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். இந்த தகவலை ரெயில்வே போலீஸ் கமி‌ஷனர் நிகேத் கவுசிக் உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்