அதிகாரிகள் கோரிக்கையை ஏற்றதால் அரசு ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
தாராபுரத்தில் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதால் அரசு ஊழியர்களின் 20 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.;
தாராபுரத்தில் கால்நடை பராமரிப்பு துறை உதவியாளராக வேலை பார்க்கும் செல்வராஜ் என்பவரை, கால்நடை உதவி இயக்குனர் தங்கவேல் என்பவர், பழிவாங்கும் எண்ணத்தோடு பணி இடமாற்றம் செய்ததை உடனே திரும்ப பெறவேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு, உதவி இயக்குனரை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நேற்று மதியம் 1 மணி வரை இடைவிடாது தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ஆரம்பத்தில் தொடர் முழக்கப் போராட்டமாகவே இது இருந்து வந்தது. ஆனால் எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வராததால், தொடர் முழக்கப் போராட்டமானது காத்திருப்பு போராட்டமாக மாறியது. அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்தபடி போராட்டத்தை நடத்தினார்கள். நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய இந்த போராட்டம் இரவு முழுவதும் நடைபெற்று இடைவெளி இல்லாமல் நேற்று மதியம் வரையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
பேச்சுவார்த்தைஇதற்கிடையே நேற்று காலை 10 மணி அளவில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருகன், அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் அம்சராஜ், வட்டகிளை நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, கால்நடை உதவி இயக்குனர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுகிறோம் என்று தெரிவித்தார்கள். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன் பிறகு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மதியம் மீண்டும் கால்நடைதுறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
முடிவுக்கு வந்ததுஇரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர் செல்வராஜூக்கு வழங்கிய பணி இடமாற்றத்தை ரத்து செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை மதியம் 1 மணிக்கு கைவிட்டனர். இதன் மூலம் கடந்த 20 மணி நேரமாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.