ஓமலூர் அருகே கல்லால் தாக்கி விவசாயி படுகொலை

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டியில் கல்லால் தாக்கி விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2017-02-14 23:00 GMT
ஓமலூர்,

விவசாயி

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி வேடப்பன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 50), விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு மலர்(26) என்ற மகளும், மதியழகன்(25), சக்திவேல்(23) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் சின்னராஜ் தனது மனைவியுடன் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். பின்னர் அவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீவட்டிப்பட்டி களர்காடு அருகே உள்ள அவரது விவசாய நிலத்தில் சிமெண்டு செங்கலால் ஆன(ஹாலோ பிளாக்ஸ்) வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே நேற்று சின்னராஜ் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கட்டிலில் பிணமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் சித்ராவிற்கு தகவல் கொடுத்தனர். உடனே சித்ரா தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கல்லால் தாக்கி கொலை

அப்போது சின்னராஜ் மார்பு மற்றும் நெற்றி பகுதியில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கொலையாளி பயன்படுத்திய பாறாங்கல் அவருடைய உடலின் மீது கிடந்தது. மேலும் அவரின் தலையில் இருந்து வழிந்திருந்த ரத்தம் அந்த பகுதியில் உறைந்திருந்தது. மேலும் அவரது மார்பு பகுதியில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு இருந்த அடையாளமும் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த அந்த மோப்பநாய், தீவட்டிப்பட்டி சுடுகாடு வழியாக மெயின் ரோடு வரை ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவு செய்தனர். பின்னர் சின்னராஜின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான சின்னராஜிக்கு வண்ணான்குட்டை பாறை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததும், அங்கேயே போய் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சமீபகாலமாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சின்னராஜிக்கு 5 சகோதரர்களும், 4 சகோதரிகளும் உள்ளனர். இதனால் சொத்து தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் தகராறா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்