தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர் 9 பேர் காயம்

தஞ்சை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை வீறு கொண்டு வீரர்கள் அடக்கினர். இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-02-14 23:00 GMT
தஞ்சாவூர்,

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுவது வழக்கம். தடைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மாடுகள்அவிழ்த்துவிடும் வாடிவாசல்கள் களை இழந்து காட்சியளித்தன. இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. இதையடுத்து ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடக்கத் தொடங்கியது.

தஞ்சை மாவட்டம் வல்லம் மேட்டுத்தெருவில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. காளைகள் திறந்து விடப்படும் வாடிவாசலில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதே போல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாதபடி, சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு கம்பி வேலியால் மூடப்பட்டு இருந்தது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

மருத்துவ பரிசோதனை

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அதிகாலை முதலே கொண்டு வரப்பட்டன. மாடு பிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். மாடு பிடி வீரர்களுக்கு 7 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் என 21 பேர் அடங்கிய மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். மது அருந்தி இருக்கிறார்களா என்றும் சோதனை நடத்தப்பட்டது. தகுதியில்லாத வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் சோதனை நடத்தப்பட்டது.

பின்பு மாடு பிடி வீரர்கள் மத்தியில் கலெக்டர் அண்ணாதுரை உறுதிமொழி வாசித்தார். அப்போது அவர், வல்லம் தெற்கு கிராமத்தில் தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும், வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம் என்றும் உறுதிமொழிகிறோம் என்று கூறினார். அதனை மாடு பிடிவீரர்கள் திரும்ப வாசித்து உறுதி மொழி ஏற்றனர்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

பிறகு காலை 10.15 மணிக்கு கலெக்டர் அண்ணாதுரை கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் பழனியாண்டவர் கோவில் காளை திறந்து விடப்பட்டது. அவற்றை யாரும் தொடவில்லை. அதன்பின், வரிசையாக ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்தன. காளைகளின் வாலையும், கொம்பையும் பிடித்தால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மைக் மூலம் எச்சரிக்கை செய்தபடி இருந்தார். மேலும் ஒரு காளையை ஒருவீரர் மட்டுமே அடக்க வேண்டும். மாறாக குழுவாக சேர்ந்து அடக்கினால், பரிசு கிடையாது என்றும் சொல்லப்பட்டு இருந்தது.

அப்போது ஒரு வீரர் காளையின் கொம்பை பிடித்ததால் உடனடியாக அவரை போலீசார் களத்தில் இருந்து வெளியேற்றினர். சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் விரட்டி பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் சில காளைகளை நெருங்கவே முடியவில்லை. அவை தன்னை நெருங்க வந்த மாடுபிடி வீரர்களை தூக்கி பந்தாடின. அப்போது கம்பி வேலிகளில் வீரர்கள் ஏறி நின்று கொண்டனர். உடனே வீரர்கள் கீழே இறங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் களத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்றும் விழாக்குழுவினர் மைக் மூலம் அறிவுறுத்தினர்.

பரிசு பொருட்கள்

அடங்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. சைக்கிள், குத்துவிளக்கு, குடை, எவர் சில்வர் பாத்திரங்கள் போன்றவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டன. சில காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளைகளை அடக்குபவர்களுக்கு ரூ.2 ஆயிரம், தங்ககாசு போன்றவை வழங்குவதாக அறிவித்தனர். பரிசுகளை பெற்றவர்கள் திடலில் உற்சாக மிகுதியால் துள்ளிக்குதித்தனர். 400 வீரர்கள் வந்திருந்ததால் 100 பேர் வீதம் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதனால் போட்டி தொடர்ந்து உற்சாகத்துடன் நடந்தது.

மாடு பிடிவீரர்களுக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் காளைகளும் களத்தில் சீறிப் பாய்ந்தன. சில காளைகள் தன்னை நெருங்க வரும் மாடு பிடிவீரர்களை முட்டி தள்ளியது. அதில் காயம் அடைந்தவர்களுக்கு உடனே மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டு மாலை 3.50 மணிக்கு நிறைவடைந்தது.

9 பேருக்கு காயம்

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 400 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் 300 காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. நேரம் இல்லாத காரணத்தினால் மீதமுள்ள 100 காளைகள், வாடிவாசல் வழியாக அழைத்து செல்லப்பட்டன. இந்த காளைகளை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடு பிடி வீரர்களில் 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி, வருவாய் கோட்ட அலுவலர் சுரேஷ், தாசில்தார் குருமூர்த்தி, வல்லம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சிங்.ஜெகதீசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்