சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கிய தீபா ஆதரவாளர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல்

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று பெரம்பலூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய தீபா ஆதரவாளர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-14 23:00 GMT
பெரம்பலூர்,

அசாதாரணமான அரசியல் சூழல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூர் தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கர்நாடகா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் சார்பிலும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜெயலலிதா திடீரென காலமானதால் அ.தி.மு.க. பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். தற்போது அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், சசிகலா ஆதரவாளர்கள் என பிரிவு ஏற்பட்டதால் அரசியலில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

பன்னீர்செல்வத்தை கண்டித்து சுவரொட்டிகள்

இந்த நிலையில் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா உள்பட 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டு 14-2-2017 (நேற்று) அன்று காலை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் வானொலித்திடலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன.

தீபா ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே சில கடைகள் அடைக்கப்பட்டன. தீபா பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரம்பலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை (வயது 52), பெரம்பலூரை சேர்ந்த மணிசேகரன் (55), கவுல்பாளையத்தை சேர்ந்த சம்பத் (48), செங்குணத்தை சேர்ந்த நல்லுசாமி (64) உள்ளிட்ட தீபா ஆதரவாளர்கள் பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் கூடினர். பின்னர் அவர்கள், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக பட்டாசுகளை வெடித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண் டாடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சசிகலாவுக்கு ஆதரவு தரும் அ.தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து, அங்கு நின்ற தீபா ஆதரவாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு டீக் கடையில் இருந்த பாத்திரத்தை எடுத்து தலையில் தாக்கியதில் தீபா ஆதரவாளர் பிச்சை படுகாயமடைந்தார். போலீசார் வருவதற்குள் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் நின்று கொண்டிருந்த பிச்சை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தீபா ஆதரவாளர்களான மணிசேகரன், சம்பத், நல்லுசாமி உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டது.

பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பிச்சை உள்ளிட்டோரிடம் விசாரித்தனர். அப்போது, அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜபூபதி, இக்பால் உள்ளிட்டோர் தாக்கியதாக போலீசாரிடம் தீபா ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க.வினர் சோகம்

இதற்கிடையே பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்தீபா பேரவையினர், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வரவேற்றனர். சில இடங்களில் பாதுகாப்பு கருதி பட்டாசு வெடிப்பதை போலீசார் தடுத்தனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக அமைந்ததால், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் சோகத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் பெரம்பலூர் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. 

மேலும் செய்திகள்