அரியலூரில் அ.தி.மு.க.வினர் சோகம்; ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சசிகலாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அமைந்ததால் அரியலூரில் அ.தி.மு.க.வினர் சோகம் அடைந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்றனர்.

Update: 2017-02-14 22:45 GMT
அரியலூர்,

பலத்த போலீஸ் பாதுகாப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக அவர்கள் கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து கர் நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுசெயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியது.

சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு அமைந்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அரியலூரில் பஸ்நிலையம், செந்துறை ரோடு, அரசு கலைக்கல்லூரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில்நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போலீசார் ஆங்காங்கே ரோந்து வாகனங்களில் சென்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க.வினர் சோகம்

நேற்று காலை தீர்ப்பு வெளியானதும் அரியலூரிலுள்ள அ.தி.மு.க அலுவலகங்களில் தொண்டர்கள், நிர்வாகிகள் சோகத்துடன் இருந்தனர். அரியலூர் கல்லூரி சாலையில் தீபா பேரவையினர் குவிந்தனர். அங்கு போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர் நகரில் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கின.

பட்டாசு வெடித்து...

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியானதும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முரளி தலைமையில் சாமிநாதன், பரமசிவம், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் ஜெயங்கொண்டம் நாலுரோடு பகுதியில் கூடினர். பின்னர் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். எனினும் அவர்கள் பட்டாசு வெடித்து விட்டு கோஷமிட்டபடியே நடந்து சென்றனர்.

ஜெயங்கொண்டத்தில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்