சீமைக்கருவேல மரங்களை 21-ந் தேதிக்குள் முற்றிலுமாக அகற்ற வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வருகிற 21-ந் தேதிக்குள் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என கலெக்டர் கணேஷ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-02-14 22:45 GMT
புதுக்கோட்டை,

ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற உத்தர விடப்பட்டுள்ளது. கூட்டத்தில் சீமை கருவேல மரங்களால் கால்நடைகள், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல்கள் ஆகியவைகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள், ஒலி பெருக்கிகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்த அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.

21-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும்

மேலும் நமது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பிற துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வருகிற 21-ந் தேதிக் குள் முற்றிலுமாக அகற்றபட வேண்டும். மேலும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை பட்டாதாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அகற்ற வேண்டும்.

ஒருவேளை அகற்றப்பட வில்லையெனில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் அங்குள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்ய வேண்டும். மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களது துறைகளின் மூலம் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டதன் விபரம் குறித்த அறிக்கையினை வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்குள் அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்