நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை கலெக்டர் வழங்கினார்

நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை கலெக்டர் வழங்கினார்

Update: 2017-02-14 22:45 GMT
திருச்சி,

தமிழக அரசின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கல்வி, தொழில் புரிவதற்கான உதவி மற்றும் அவர்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது முதல் 60 வயது உட்பட்டவராகவும், நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த வாரியத்தின் மூலம் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி, திருமணம், மகப்பேறு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைவிற்கான நிதி உதவித்தொகை, மூக்கு கண்ணாடிக்கான நிதி உதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 633 பேர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் தமிழக அரசின் சார்பில் கிடைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கான சாதி சான்றிதழ் அவசியமான ஒன்றாகும். சாதி சான்றிதழ் உள்ள அனைவருக்கும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், தேவராயநேரி பகுதியை சேர்ந்த 18 நரிக்குறவர்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நரிக்குறவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. புதிய உறுப்பினர் அட்டையை நரிக்குறவர்களுக்கு கலெக்டர் பழனிசாமி வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துவடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்