மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட பெற்றோர்கள் எதிர்ப்பு டாக்டர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு

முசிறியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்களை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2017-02-15 04:30 IST
முசிறி,

தடுப்பூசி போட எதிர்ப்பு

முசிறியில். துறையூர் சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்கு ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சில நாட்களுக்கு முன்பு தனித்தனியாக கடிதம் கொடுத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு த.புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த டாக்டர்கள் தினேஷ், ராதாகிருஷ்ணன், கிராம சுகாதார செவிலியர் அன்னகாமு, சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் மருந்தாளுனர் பிரகலாதன் ஆகியோர் தடுப்பூசி மருந்துகளுடன் வந்தனர்.

அவர்களிடம், பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வழங்கிய கடிதத்தை பள்ளி நிர்வாகத்தினர் காட்டியுள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்த மருத்துவ குழுவினர், பெற்றோர்கள் நேரில் வந்து சொல்ல வேண்டும் என்று கூறியதால், பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த மருத்துவர்களிடம் தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி எதுவும் போட வேண்டாம் என்று கூறி ஊசி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர்களை முற்றுகை

அப்போது டாக்டர்கள், இந்த தடுப்பூசியினால் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டுதான் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட அனுமதியுங்கள் என்று கூறினர். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், ‘வாட்ஸ்-அப், முகநூல் போன்றவற்றில் இந்த ஊசி போட்டு கொள்ளக்கூடாது என நிறைய பதிவுகள் வந்துள்ளதால் அச்சப்பட வேண்டியுள்ளது.

எனவே எங்களின் குழந்தைகளுக்கு இந்த தடுப்பு ஊசி போட வேண்டாம்‘ என்று கூறி டாக்டர்களை முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு ஊசி போடாமல் பள்ளியை விட்டு திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்