விபத்தில் பலியான பெண் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு

விபத்தில் பலியான பெண் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5¼ லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-02-14 21:35 GMT
தஞ்சாவூர்,

பெண் தொழிலாளி

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே தென்னங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 8.10.2012 அன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறவினர்களுடன் லோடு ஆட்டோவில் பூதலூருக்கு சென்றுகொண்டிருந்தார். லோடு ஆட்டோவை கள்ளப்பெரம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டிச்சென்றார். பூதலூர் சாலை, தென்னங்குடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லட்சுமி படுகாயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரூ.5¼ லட்சம் இழப்பீடு

இந்தநிலையில் லட்சுமியின் மகள் உஷா (31) இழப்பீடு கோரி தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், லட்சுமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்து 500 வழங்குமாறு லோடு ஆட்டோவின் உரிமையாளர் முத்துசங்கருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சரக்குகளை ஏற்றிச்செல்ல வேண்டிய லோடு ஆட்டோ ஆட்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டதால், இழப்பீடு தொகையை லோடு ஆட்டோவின் உரிமையாளர் வழங்க நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்