ஆரல்வாய்மொழியில் வீட்டில் தீ விபத்து; பெண் உடல் கருகி பலி

ஆரல்வாய்மொழியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கி கொண்டிருந்த பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

Update: 2017-02-14 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சிறிய வீடு

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பிரேமா (வயது 40). கூலி தொழிலாளி. இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். பிரேமாவுக்கு பொன்னப்பன் என்கிற பரமேஷ் (10) என்ற மகன் உள்ளான். இவன் அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பிரேமா, தனது மகனுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். பிரேமாவின் அக்காள் சுசீலாவின் வீடும் அருகில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பரமேஷ் அருகில் உள்ள சுசீலா வீட்டுக்கு சென்றான். இரவு அங்கேயே தங்கிவிட்டான்.

தீப்பிடித்து எரிந்தது

இந்தநிலையில், நேற்று அதிகாலை 1 மணிஅளவில் பிரேமாவின் சகோதரி ஒருவர், தனது வீட்டின் வெளியே வந்தபோது, பிரேமாவின் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, சத்தம் போட்ட நிலையில் பிரமாவின் வீட்டை நோக்கி ஓடினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் பிரேமா வீட்டுக்கு ஓடிவந்தனர். அத்துடன், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

தீயில் கருகி சாவு

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பிரேமா வீட்டின் உள்ளே உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

இதற்கிடையே, நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். இதில் வீடு மற்றும் உள்ளே இருந்த துணிகள் உள்பட அனைத்து பொருட்களும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆறுமுகம், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “பிரேமாவின் வீட்டின் அருகே தனியார் காற்றாலை உள்ளது. அங்கு நின்ற சீமை கருவேல மரங்கள் வெட்டப்பட்டு குவித்து வைத்து தீ வைக்கப்பட்டது. அந்த தீ ‘மள.. மள‘...வென எரிந்து பிரேமாவின் வீட்டில் பரவியது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிரேமா தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்” என்று தெரியவந்தது.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து, நேற்று காலையில் தோவாளை தாசில்தார் சாரதாமணி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பிரேமாவின் ஈமச்சடங்குகளை நிறைவேற்ற ரூ.5 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.

மேலும், சம்பவ இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்