மழையால் சேதம் அடைந்த பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

மணிலா பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் ராஜேசிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2017-02-14 22:30 GMT
மழையால் சேதம்

கடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாநில விவசாய சங்க தலைவர் குமரகுரு தலைமையில் விவசாயிகள் பழனி, சிவகுரு, தணிகாசலம் மற்றும் விவசாயிகள் மழையால் சேதம் அடைந்த மணிலா பயிரை கலெக்டர் ராஜேசிடம் காண்பித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் கடந்த மாதம் பெய்த கன மழையின் காரணமாக கருப்பஞ்சாவடி, கட்டியங்குப்பம், திம்மராவுத்தன்குப்பம், பேய்க்காநத்தம் மற்றும் பல கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மணிலா பயிர் அழுகி உள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், காப்பீடு செய்வதற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பின்னர் விவசாய சங்க தலைவர் குமரகுரு நிருபர்களிடம் கூறியதாவது:–

நிவாரணம் வழங்க வேண்டும்

குறிஞ்சிப்பாடி தாலுகாவில் மணிலா பயிர்கள் சாகுபடி செய்தோம். செடி நன்கு வளர்ந்து பயிர் காய்க்கும் பருவத்தில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக நிலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மணிலா பயிர் அழுகி சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த மணிலா பயிரை கலெக்டரிடம் காண்பித்து நிவாரணம் கேட்க வந்தோம்.

கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் அண்ணாகிராமம் ஆகிய தாலுகாக்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் சேதம் அடைந்த மணிலா பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதோடு மணிலா பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் இருப்பதால் காப்பீடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். கடந்த ஆண்டு காப்பீடு செய்த நெற்பயிருக்கு உரிய தொகை இதுவரை வழங்கப்படாததால் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்