குழந்தைகளின் கண் முன்னே பெண் ஊழியர் வெட்டிக் கொலை

மூணாறு அருகே குழந்தைகளின் கண் முன்னே காப்பக பெண் ஊழியரை வெட்டிக் கொலை செய்து தங்கநகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-02-14 22:00 GMT
காப்பகம்

மூணாறு குண்டுமலை எஸ்டேட் தென்மோர் பகுதியை சேர்ந்தவர் மணி. சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வருகிறார். அவருடைய மனைவி ராஜகுரு (வயது 46). இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான காப்பகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.

பின்னர் காப்பகத்துக்கு வந்த 9 குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்துவிட்டு கவனித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்மநபர்கள் சிலர் காப்பகத்துக்குள் புகுந்தனர். காப்பகத்தின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட அவர்கள், ராஜகுருவை மிரட்டி நகைகளை கழற்றி தருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

வெட்டிக் கொலை

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து கூச்சல் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் குழந்தைகளின் கண்முன்னே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜகுரு துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அவர்கள் ராஜகுரு அணிந்திருந்த 12 பவுன் தங்கநகைகளை பறித்து கொண்டு பின்பக்க ஜன்னல் வழியாக தப்பி சென்றனர்.

மாலை வேளையில் குழந்தைகளை அழைப்பதற்காக பெற்றோர் காப்பகத்துக்கு சென்றனர். அப்போது காப்பகத்தின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது காப்பகத்துக்குள் ராஜகுரு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பரபரப்பு

மேலும் குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர். ராஜகுரு அணிந்திருந்த தங்கநகைகளும் மாயமாகி இருந்தன. இதுகுறித்து மூணாறு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராஜகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது காப்பகத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜகுருவை நகைக்காக மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்