திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 ஊராட்சிகள் இணைவது எப்போது?

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 ஊராட்சிகள் இணைவதில் ஒரு ஆண்டாக சிக்கல் நீடித்து வருகிறது.

Update: 2017-02-14 22:15 GMT
10 ஊராட்சிகள்

திண்டுக்கல் நகரம் பல்வேறு வரலாற்று பின்னணிகளையும், சிறப்புகளையும் கொண்டது. இதை பறைசாற்றும் ஒரு அங்கமாக நகரின் மையப்பகுதியில் கம்பீரமாய் காட்சி அளிக்கும் மலைக்கோட்டை திகழ்கிறது. பூட்டு தொழிலுக்கு பெயர்போன திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

முன்னதாக, கடந்த 1–11–1886 அன்று நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. அதன்பிறகு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு, கடந்த 2014–ம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையொட்டி, எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது வழக்கமான ஒன்று.

அதன்படி, திண்டுக்கல்லை சுற்றி அமைந்துள்ள பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, செட்டியப்பட்டி, குரும்பப்பட்டி, பள்ளப்பட்டி, பொன்னிமாந்துறை, பிள்ளையார்நத்தம், அடியனூத்து, தோட்டனூத்து, முள்ளிப்பாடி ஆகிய 10 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு நடத்த அப்போதைய திருச்சி கமி‌ஷனர் நியமனம் செய்யப்பட்டார். அவர் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் 10 ஊராட்சிகளிலும் நேரில் ஆய்வு செய்தார். இந்த விவரங்களை அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்தார்.

பரிசீலனை இல்லை

இதற்கிடையே, 10 ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தனித்தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல, திண்டுக்கல் மாநகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, தனி அலுவலரின் அறிக்கை, தீர்மானங்கள் உள்ளிட்டவற்றுடன் திட்டமதிப்பீடும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. இன்னும் அரசின் அனுமதி மட்டும் கிடைக்க வேண்டி இருக்கிறது.

திட்டமதிப்பீடு தாக்கல் செய்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக கூறப்பட்டது. இதில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தேதி அறிவிக்கப்பட்டதால், திண்டுக்கல் மாநகராட்சி தாக்கல் செய்த திட்டமதிப்பீடு மீது எந்த பரிசீலனையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

கோரிக்கை

ஆனால் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தேர்தல் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி ரத்து செய்யப்பட்டு இருப்பதால், மாநகராட்சியுடன் 10 ஊராட்சிகளை இணைப்பதற்கான திட்டத்தின் மீது பரிசீலனை செய்வதற்கான தடை நீங்கி உள்ளது. எனவே, அடுத்த தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக துரிதமாக நடவடிக்கை எடுத்து 10 ஊராட்சிகளையும் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

அரசியல் சூழ்நிலை

தேர்தல் தேதி அறிவிப்பு, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு போன்ற காரணங்களினால் மாநகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்கும் திட்டம் தாமதமாகி வந்தது. புதிய முதல்–அமைச்சரை தேர்வு செய்த பின்பு, இந்த பணிகள் துரிதமாக நடந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி மற்றும் 10 ஊராட்சிகளின் வருமான விவரங்கள் கேட்கப்பட்டன.

அந்த விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் உடனடியாக அறிவிப்பு வரும் என காத்திருந்தோம். ஆனால், அதற்குள் தமிழகத்தில் அசாதாரணமான அரசியல் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும், விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

130 சதுர கிலோ மீட்டர்

தமிழகத்தில் உள்ள சிறிய மாநகராட்சிகளில் திண்டுக்கல்லும் ஒன்று. 10 ஊராட்சிகளை இணைத்தால்தான் எல்லையை விரிவாக்கம் செய்ய முடியம். தற்போது, திண்டுக்கல் 14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. ஆனால், திட்டமிட்டபடி 10 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டால் இதன் பரப்பளவு கணிசமாக அதிகரிக்கும். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘திண்டுக்கல் மாநகராட்சியுடன் 10 ஊராட்சிகளும் இணையும்போது, 130 சதுர கிலோ மீட்டராக பரப்பளவு அதிகரிக்கும்’ என்றார்.

மேலும் செய்திகள்